யாழ். போதனா மருத்துவமனையின் தோற்றமும் மருத்துவர் கிறீனும் | யாழ்ப்பாண மருத்துவ வரலாறு | பாலசுப்ரமணியம் துவாரகன்
Description
சேர் பேர்சிவல் ஒக்லண்ட் டைக் யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகக் கடமையாற்றியவர். டைக் 01.10.1829 அன்று யாழ்ப்பாணத்தின் கலெக்டராகப் பதவியேற்றார். கோல்புறூக் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய கலெக்டர் பதவி அரசாங்க அதிபர் பதவி எனப் பெயர் மாற்றப்பட்டது. கலெக்டராகப் பதவி வகித்த டைக் 01.10.1833 அன்று யாழ்ப்பாணத்தின் முதலாவது அரசாங்க அதிபராகப் பதவியேற்றார்
டைக் அவர்களது மனதில் யாழ்ப்பாணத்திலே ஒரு பொது மருத்துவமனையை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ 20 ஆண்டுகளாக இருந்ததாக சேர் வில்லியம் துவைனம் குறிப்பிடுகிறார்
அமெரிக்க மிஷனரி மருத்துவர் கிறீன் மானிப்பாயில் ஆற்றிவரும் மருத்துவப் பணியை நன்கு அறிந்து கொண்ட பேர்சிவல் ஒக்லண்ட் டைக் யாழ். நகரிலே மருத்துவமனையை ஆரம்பிக்க விரும்பி கிறீனது உதவியை நாடினார்.
யாழ்ப்பாண ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகம் (Jaffna Friend-In-Need-Society) 1841 ஆம் ஆண்டு யாழ்ப்பாண மக்களுக்கு உதவும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.
பேர்சிவல் ஒக்லண்ட் டைக் , உவெஸ்லியன் மிஷனரியைச் சேர்ந்த வண. பீற்றர் பேர்சிவல் பாதிரியார், மருத்துவர் கோல்டன் மற்றும் அமெரிக்க மிசனரி மருத்துவர் கிறீன் ஆகியோரது உதவியுடன் 1850 ஆம் ஆண்டு யாழ். நகரத்தில் மருத்துவமனையை நிறுவினார்.
யாழ். போதனா மருத்துவமனையானது 1850 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 2ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தின் ஆதரவில் இந்த மருத்துவமனை ஆரம்பிக்கப்பட்டதாலும் இந்தக்கழகமே ஆரம்பத்தில் மருத்துவமனையை நிர்வகித்து வந்ததாலும் இந்த மருத்துவமனையானது ’ஆபத்துக்கு உதவும் நண்பர்கள் கழகத்தினது மருத்துவமனை ’ என்று அழைக்கப்பட்டது.